காட்டெருமை தாக்கி வடமாநில தொழிலாளி பலி


காட்டெருமை தாக்கி வடமாநில தொழிலாளி பலி
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.

காட்டெருமை தாக்கியது

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிளண்டேல் எஸ்டேட் பகுதியில் வசிப்பவர் பீரேசிங்தன்வர் (வயது 47). வடமாநில தொழிலாளி. இவர் திருமணமாகி தனது குடும்பத்தினருடன் குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று பீரேசிங்தன்வர் வழக்கம்போல் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்று உள்ளார்.

அங்கு தோட்ட பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தின் புதர் மறைவில் நின்ற காட்டெருமை ஒன்று வேறு திசைக்கு ஓடியது. பின்னர் காட்டெருமை திடீரென பீரேசிங்தன்வரை முட்டி தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சக தொழிலாளர்கள் சத்தம் போடவே, காட்டெருமை அங்கிருந்து சென்றது. பின்னர் படுகாயம் அடைந்த பீரேசிங்தன்வரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

வனத்துறையினர் விசாரணை

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் பீரேசிங்தன்வர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே பீரேசிங்தன்வர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காட்டெருமை தாக்கி இறந்த தொழிலாளியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனித-விலங்கு மோதல்

குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளில் சகஜமாக உலா வருவதால், மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. எனவே, விளைநிலங்கள், குடியிருப்புக்குள் காட்டெருமை வராமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story