ராமேசுவரம் கோவிலில் கங்கை தீர்த்தத்துடன் ஊர்வலமாக வந்த வட மாநில சாதுக்கள்
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் கங்கை தீர்த்தத்துடன் வட மாநில சாதுக்கள் ஊர்வலமாக வந்தனர்.
ராமேசுவரம்,
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில் சன்னதி தெரு பகுதியில் உள்ள பாபா அன்ன சத்திரத்தில் இருந்து சீதாராம்தாஸ் பாபா தலைமையில் ஏராளமான வடமாநில சாதுக்கள் கங்கை தீர்த்தத்துடன் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்து தரிசனம் செய்வதற்காக ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலமாக வந்த வடமாநில சாதுக்கள் கோவிலின் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தை சுற்றியபடி கோவிலின் சாமி சன்னதிக்கு வந்தனர்.தொடர்ந்து சாதுக்களால் கொண்டுவரப்பட்ட கங்கை தீர்த்ததால் கருவறையில் உள்ள சாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு அபிஷேக பூஜையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கொண்டு வந்த கங்கை தீர்த்தத்தால் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.