திருடன் என நினைத்து வட மாநில வாலிபருக்கு அடி-உதை
திருடன் என நினைத்து வட மாநில வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
வேலூர் கொணவட்டம், சேண்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவும் அந்த வாலிபர் கொணவட்டம் பெரியமசூதி அருகே சுற்றியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வடமாநில வாலிபர், குழந்தையை கடத்தி செல்லும் நபர் அல்லது வீட்டை நோட்டமிட்டு திருடும் நபராக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். அதையடுத்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைகளை பின்னால் கட்டி சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் இருந்து வடமாநில வாலிபரை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து காயம் அடைந்த வாலிபர் முதலுதவிக்காக அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.