வட மாநில தொழிலாளர்கள் குறித்த வீடியோ பதிவிட்ட வழக்கு: பீகார் வாலிபர் ஜாமீன் கேட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு குறித்த வீடியோ பதிவிட்ட வழக்கில், பீகார் வாலிபர் ஜாமீன் கேட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு குறித்த வீடியோ பதிவிட்ட வழக்கில், பீகார் வாலிபர் ஜாமீன் கேட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
வீடியோ பதிவு
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல சித்தரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரல் ஆனது.
இந்த தகவல் உண்மையானது இல்லை என்றும் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில், பீகாரை சேர்ந்த மணிஷ் காஷ்யப் (வயது 35) என்பவர்தான் பொய்யான வீடியோவை வெளியிட்டு வடமாநிலத்தினரிடம் பீதியை கிளப்பியுள்ளார் என்பது தெரிந்தது.
விசாரணை
இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பீகார் மாநிலத்தில் பதுங்கி இருந்த மணிஷ் காஷ்யப்பை கைது செய்து தமிழகத்துக்கு கொண்டு வந்தனர். அவரை மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது. பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் மற்றொரு வழக்கும் பதிவாகியுள்ளது.
ஒத்திவைப்பு
இந்தநிலையில் அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மாஜிஸ்திரேட்டு டீலாபானு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.