அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலாக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் சாமி சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.