நார்த்தாமலையில் சிறுவன் இறந்த சம்பவம்: துப்பாக்கி குண்டு ரகத்தின் அறிக்கை வர தாமதம்
நார்த்தாமலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் இறந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு ரகத்தின் ஆய்வு அறிக்கை வர தாமதமாகி உள்ளது.
துப்பாக்கி குண்டு
புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி திருச்சி விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு வெளியேறி சிறுவன் புகழேந்தி (வயது 11) தலையில் பாய்ந்ததில் அவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மத்திய மண்டல போலீஸ் அணியினர் ஆகியோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிக்கை தாமதம்
சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு எந்த ரகம், அதனை சுட்டது யார்? என்பதை கண்டுபிடிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் சிறுவன் தலையில் இருந்து அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட அந்த குண்டு ஆய்வுக்காக சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் திருச்சி மத்திய மண்டல போலீஸ் அணியினரின் துப்பாக்கிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் துப்பாக்கி குண்டு ரகத்தின் ஆய்வு அறிக்கை இதுவரை வரவில்லை. ஆய்வின் அறிக்கை வர தாமதமாகி கொண்டே இருக்கிறது. இதனால் இந்த வழக்கில் புலன் விசாரணை கிடப்பிலே உள்ளது. ஆய்வறிக்கை வந்த பின்பு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துவிட்டனர்.
போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
இதற்கிடையில் போலீஸ் உயர் அதிகாரிகளும் இடம் மாறிவிட்டனர். துப்பாக்கி குண்டு ரகத்தின் ஆய்வு அறிக்கை தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆய்வகத்தில் அந்த குண்டை ஒவ்வொரு துப்பாக்கியிலும் வைத்து பரிசோதித்து அதன் பின்பே அந்த குண்டு எந்த ரகம், எந்த துப்பாக்கியில் இருந்து வெளிவந்தது என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் தான் அடுத்த விசாரணையை போலீசார் மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது இந்த வழக்கு கிடப்பிலே போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.