வடகிழக்கு பருவமழை: கடலூர் மாநகராட்சியில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாநகராட்சியில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ஆண்டுதோறும் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கடலூர் மாவட்டம் பிற மாவட்டங்களின் வடிகாலாக இருப்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கடலூர் மாநகரில் கெடிலம், தென்பெண்ணையாறுகள் பாய்ந்து வங்கக்கடலில் சங்கமிக்கிறது. இந்த ஆறுகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கரைகள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தெருக்களில் பாய்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது.
2 ஆயிரம் மணல் மூட்டைகள்
இதை தவிர்க்கும் வகையில், கடலூர் மாநகர பகுதியில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இன்னும் தூர்வாரவில்லை. பெயரளவுக்கு ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டன. தென்பெண்ணையாற்றில் பல இடங்களில் கரைகளே இல்லை. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி நிர்வாகமும் மழையை சமாளிக்க, பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மின் மோட்டார்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது.
மேலும் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால், அந்த பகுதியில் வைத்து அடைக்கும் விதமாக 2 ஆயிரம் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாகவும் மேயர் சுந்தரி ராஜா தெரிவித்தார்.