வடக்கு இலந்தைகுளம் பெரியகுளம் கண்மாயில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வடக்கு இலந்தைகுளம் பெரியகுளம் கண்மாயில் வரத்து கால்வாயில் இருந்த தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கயத்தாறு:
வடக்கு இலந்தைக்குளம் பெரியகுளம் கண்மாய் வரத்து கால்வாயில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த தனியார் ஆக்கிரமிப்புகள் நேற்று அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
தனியார் ஆக்கிரமிப்பு
கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைகுளத்திலுள்ள பெரியகுளம் கண்மாய் பாசனத்தை நம்பி 110 ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளன. இந்த கண்மாய்க்கான தண்ணீர் வரத்து கால்வாய் கடந்த 10 ஆண்டுகளாக, தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டு, இப்பகுதி நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தது.
கிராம மக்கள் போராட்டம்
இதுகுறித்து விவசாயிகள் தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதனால் மனமுடைந்த கிராம மக்களும், விவசாயிகளும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்மாய் கரையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் சுப்புலட்சுமி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அக்டோபர் 3-ந்தேதி(நேற்று) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்களும், விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்த நிலையில் நேற்று தாசில்தார் தலைமையில் 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் கண்மாய் வரத்து கால்வாயில் இருந்த அனைத்து தனிநபர்களின் ஆக்கிரமிரப்புகளும் அகற்றப்பட்டன. கால்வாயும் தூர்வாரப்பட்டு கண்மாய்க்கு தண்ணீர் வரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பஞ்சாயத்து தலைவர் கணபதி, மண்டல துணை தாசில்தார்கள் திரவியம், ஐயப்பன், அந்தோனிஜெபராஜ், கயத்தாறு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமி, வருவாய் ஆய்வாளர் நேசமணி, கிராம நிர்வாக அலுவலர் லதா ஆகியோர் உடனிருந்தனர்.
கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமைமையில் ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டோனிதீலீப், காசிலிங்கம், முருகன், மாரியப்பன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.