ஏரியில் குதித்த வடமாநில தொழிலாளி
கிருஷ்ணகிரி அருகே கொள்ளையன் என கருதி பொதுமக்கள் துரத்தியதால் ஏரியில் குதித்த வடமாநில தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே கொள்ளையன் என கருதி பொதுமக்கள் துரத்தியதால் ஏரியில் குதித்த வடமாநில தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ஏரியில் குதித்தார்
கிருஷ்ணகிரி அருகே செல்லாண்டி நகர் பகுதியில் நேற்று காலை ஆண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தார். அதை பார்த்த பொதுமக்கள் அவரிடம் விசாரிக்க சென்றனர். பொதுமக்கள் வருவதை பார்த்த அந்த நபர் அங்கிருந்து ஓடினார். இதனால் அவர் கொள்ளையனாக இருக்கலாம் என கருதி சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை விரட்டி சென்றனர்.
அப்போது அந்த நபர் கீழ்புதூர் ஏரியில் குதித்தார். இதையடுத்து பொதுமக்கள் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பரிசலில் சென்று அந்த நபரை மீட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
வடமாநில தொழிலாளி
அவர் பீகாரை சேர்ந்த தொழிலாளி சுபாஷ் முர்ரு (வயது 35) என தெரிய வந்தது. பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்ததும், நண்பர்களை பார்க்க அவர் கிருஷ்ணகிரி வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரின் நண்பர்களுடைய செல்போன் எண்களை தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன.
இதையடுத்து அவரை போலீசார் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே அவரது மனைவியின் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டு பேசினா். அப்போது தனது கணவர் கிருஷ்ணகிரி சென்றதாகவும், பெங்களூருவில் தான் வேலை செய்வதாகவும் கூறினார். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.