வடமாநில தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
கரூர் அருகே ஜவுளி பூங்காவில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வடமாநில ஊழியர் தற்கொலை
கரூர் அருகே புத்தாம்பூரில் ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு வெளியிடங்களில் இருந்து நூல்களை வாங்கி போர்வைகள், அலங்கார துணிகள், திரைச்சீலைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பல வடமாநிலத்தினரும் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சத்தீஸ்கார் மாநிலம் ஜன்ஜிர் கம்பா குர்டாவை சேர்ந்த அசோக் தாஸ் மகந்த் (வயது 37) என்பவர் ஜவுளி பூங்காவின் விடுதியில் தங்கியிருந்து கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை விடுதியில் 44-வது அறையில் இருந்த அசோக் தாஸ் மகந்த் திடீரென மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அவரது உடல் முழுவதும் கருகியது.
சாவு
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த அசோக் தாஸ் மகந்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அசோக் தாஸ் மகந்த் பரிதாபமாக இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மனைவி மயக்கம்
அசோக் தாஸ் மகந்த் இறந்த செய்தி கேட்டு அவரது மனைவி அனிதா மகந்த் (34) மருத்துவமனையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதே ஜவுளி பூங்காவில் பெண்கள் விடுதியில் தங்கி அனிதா மகந்த் அவரது மூத்தமகள் முஸ்கன் சூர்யாவும் ஊழியராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து அசோக் தாஸ் மகந்த் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கரூர் ஜவுளி பூங்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.