சிவகாசியில் மிகுந்த பாதுகாப்புடன் பணியாற்றி வருகிறோம்
சிவகாசியில் எவ்வித அச்சமும் இன்றி மிகுந்த பாதுகாப்புடன் பணியாற்றி வருவதாக ஆய்வுக்கு வந்தவரிடம், வடமாநில இளைஞர்கள் தெரிவித்தனர்.
சிவகாசி,
சிவகாசியில் எவ்வித அச்சமும் இன்றி மிகுந்த பாதுகாப்புடன் பணியாற்றி வருவதாக ஆய்வுக்கு வந்தவரிடம், வடமாநில இளைஞர்கள் தெரிவித்தனர்.
வீடியோக்கள்
வடமாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்துள்ள இளைஞர்கள், தமிழகத்தில் சில இடங்களில் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த நிலையில் அந்த வீடியோக்கள் போலியாக உருவாக்கப்பட்டவை என்றும், தமிழகத்தில் அதுபோன்ற சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வடமாநில இளைஞர்கள் அதிகம் தங்கி பணியாற்றும் இடங்களுக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தனர்.
நேரில் ஆய்வு
பீகாரில் இருந்து ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் செய்தி தொடர்பாளர் ரித்து ஜெய்ஸ்வால் நேற்று காலை சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்துக்கு நேரில் வந்து அங்கு பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களிடம் பணி பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த சுமார் 20 இளைஞர்கள் தங்களுக்கு இங்கு எவ்வித அச்சமும் இல்லை என்றும், உரிய பாதுகாப்புடன் பணியாற்றி வருவதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அச்சக அதிபரிடம் இந்த இளைஞர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பேட்டி
இந்த ஆய்வு குறித்து ரித்து ஜெய்ஸ்வால் கூறியதாவது, "சொந்த ஊரை விட்டும், உறவுகளை விட்டும் பிரிந்து இங்கு வந்து பணியாற்றி வரும் எங்கள் மாநில இளைஞர்களை பார்க்க இங்கே வந்துள்ளேன். அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்கள், மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. அப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்களை பரவவிட்டவர்களின் ஒரே ஆசை தமிழக அரசையும், பீகார் அரசையும் களங்கப்படுத்துவதுதான்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பா.ம.க. மாநில பொருளாளர் சிவகாசி திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் மற்றும் பலர் இருந்தனர்.
பின்னர் ராஷ்டீரிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ரித்து ஜெய்ஸ்வால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளை சந்தித்து மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்தியும், நன்றியும் தெரிவித்தார். மேலும் இது குறித்து பீகார் மாநில அரசிடம் தெரிவிப்பதாகவும் கூறினார்.