இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகளை அறிவிக்க கூடாது - டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகளை அறிவிக்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்திருக்கக்கூடிய பார்களில் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கும் தின்பண்டங்களை விற்பனை செய்வதற்கும் உரிமம் வழங்குவதற்கான டெண்டர் கடந்த 6-ந்தேதி கோரப்பட்டது. நடப்பாண்டு நவம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் வரையிலான காலத்திற்கு இந்த டெண்டர் கோரப்பட்டு இருந்தது.
இதில் பார்கள் அமைந்திருக்கக்கூடிய நிலங்களின் உரிமையாளர்களிடமிருந்து தடையில்லா சான்றிதழ்களும் வாடகை ஒப்பந்தமும் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஏழு நாட்களுக்குள் அந்த தடையில்லா சான்று வழங்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அடுத்து அதிக தொகை உரிமம் கோரியவருக்கு நிலம் உரிமையாளரிடமிருந்து தடையில்லா சான்று கேட்கப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிபந்தனைகளை எதிர்த்து வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் நில உரிமையாளர்களின் விவரங்களை வழங்காமல் தடையில்லா சான்றும் வாடகை ஒப்பந்தமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது என்பது பாரபட்சமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 27-ம் தேதி இந்த டெண்டர் திறக்கப்பட இருப்பதினால் டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்களை டெண்டர்களில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம் என்றும் இந்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகளை அறிவிப்பதை தள்ளி வைக்கலாம் என்று அரசு தரப்பில் ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது.
இதனை மனுதாரர்கள் ஏற்று கொண்டதால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டெண்டர் முடிவுகளை அறிவிக்க கூடாது என்றும் அதனை தள்ளி வைக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இந்த வழக்குகளின் விசாரணையை அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.