ஆசிரியர்களை நியமிக்க கோரி போராட்டம் அறிவிப்பு: பர்கூர் பழங்குடியின பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - மாணவ-மாணவிகள் இன்று உண்ணாவிரதம்


ஆசிரியர்களை நியமிக்க கோரி போராட்டம் அறிவிப்பு: பர்கூர் பழங்குடியின பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - மாணவ-மாணவிகள் இன்று உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 23 Jun 2023 2:47 AM IST (Updated: 23 Jun 2023 2:09 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களை நியமிக்க கோரி போராட்டம் அறிவிப்பு: பர்கூர் பழங்குடியின பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மாணவ-மாணவிகள் இன்று உண்ணாவிரதம்

ஈரோடு

பர்கூர் பழங்குடியினர் நலத்துறை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களை நியமிக்க கோரி போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து அங்கு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன்காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாணவ- மாணவிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

நலத்துறை பள்ளிக்கூடம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைக்கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிட பள்ளிக்கூடம் கடந்த 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் இந்த பள்ளிக்கூடம் 1993-ம் ஆண்டு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 9-ம் வகுப்புக்கு மேல் மாணவ- மாணவிகள் படிக்க வசதி இல்லாமல் இடை நிற்றல் ஏற்பட்டது. இதை தடுக்கும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு இந்த பள்ளிக்கூடம் உயர்நிலைப் பள்ளியாகவும், தொடர்ந்து 2016-ம் ஆண்டு மேல்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 380 மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். 6-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்புவரை தலா ஒரு வகுப்பும், பிளஸ்-1, பிளஸ்-2 தலா 3 வகுப்புகளும் என மொத்தம் 11 வகுப்புகள் உள்ளன.

ஆசிரியர்கள் இல்லை

ஆனால் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை. ஒரே ஒரு தமிழ் ஆசிரியர், ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் உள்ளனர். இங்கு 10 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருப்பதால் வகுப்புகளுக்கு தேவையான ஆசிரியர்கள் யாரும் இல்லை. இதுபோல் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. இது மாணவ- மாணவிகளுக்கு கற்றலில் பாதிப்பையும், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடும் பணிச்சுமையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே பர்கூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பர்கூர் பகுதி அனைத்து அரசியல் கட்சி மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்தநிலையில் தற்போது மலைப்பகுதி மாணவ- மாணவிகள் ஆர்வமாக பள்ளிக்கூடத்தில் சேர்ந்து உள்ளனர். ஆனால் போதிய ஆசிரியர்கள் இல்லாதது அவர்களுக்கு கல்வி மறுப்பது போன்ற அவலத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சற்று வசதியானவர்கள் தங்கள் குழந்தைகளை சமவெளியில் உள்ள பள்ளிக்கூடங்களில் சேர்க்க ஆயத்தமாகி வருகிறார்கள். ஆனால் வசதி இல்லாத கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது.

இதை தடுக்கும் வகையில் பர்கூர் மலைப்பகுதி அனைத்து அரசியல் கட்சி மற்றும் பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் சார்பில் ஆசிரியர் நியமனம் தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது. இதை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை பொறுப்பு அதிகாரி ராமச்சந்திரன், தனி தாசில்தார் கணேசன், ஆகியோர் பர்கூர் பள்ளிக்கூடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஜே.கணேசன் தலைமையில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், தி.மு.க. நிர்வாகி பி.மாணிக்கம், அ.தி.மு.க. நிர்வாகி ஆர்.முருகன், தே.மு.தி.க. நிர்வாகி பி.முருகன், பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவர் ராஜேந்திரன், சுடர் அமைப்பு இயக்குனர் எஸ்.சி.நடராஜ் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாமல் தோல்வி அடைந்தது.

இன்று உண்ணாவிரத போராட்டம்

எனவே இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி போராட்டக்குழுவினர் கூறியதாவது:-

பர்கூர் உறைவிட பள்ளிக்கூடத்தில் தொடக்க காலம் முதலே, ஆசிரியர் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. எங்கள் பகுதி மக்களின் ஆர்வத்தால் தொடர்ந்து பள்ளிக்கூடம் இயங்கியதுடன், மேல்நிலைப்பள்ளிக்கூடமாகவும் தரம் உயர்ந்து உள்ளது. ஆனால் தொடர்ச்சியாக மலைப்பகுதி மாணவ-மாணவிகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். எங்களுக்கு ஏன் ஆசிரியர்கள் பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை என்ற கேள்வி உள்ளது. பர்கூர் மட்டுமின்றி தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 320 பள்ளிக்கூடங்களில் இதே அவலம் உள்ளது. இதுதொடர்பாக தொடர் கோரிக்கைகள் மூலம் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி கவனத்தில் கொண்டு நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரும் அறிவிப்பை கடந்த பட்ஜெட்டில் அறிவிக்க செய்தார். ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே அந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்துவதன் மூலம் எங்கள் துயரங்களை தீர்க்கும் வகையில் ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி பர்கூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். பள்ளிக்கூடத்தை புறக்கணித்து மாணவ-மாணவிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story