வாகனங்களை அகற்றாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்
வேலூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அகற்றாமல் சாலைகள் அமைத்த ஒப்பந்தாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அகற்றாமல் சாலைகள் அமைத்த ஒப்பந்தாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் பகுதியில் சென்னை-பெங்களூரு அணுகுசாலையோரம் அமைந்துள்ள நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது அவர் அந்த கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றவும், கால்வாயில் குப்பைகள் கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், தேவையற்ற பொருட்களை சாலையோரம் கொட்டுவதை தவிர்க்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், மாநகராட்சி என்ஜினீயர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
20 கண்காணிப்பு கேமராக்கள்
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் வெள்ளம் செல்லும் நீர்வரத்து கால்வாய்களை ஆய்வு செய்து வருகிறோம். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மழைநீர் கால்வாயின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. கால்வாயில் குப்பைகள் கொட்டக்கூடாது, கால்வாயை தூர்வார வேண்டும் என்று அறிவுறுத்திப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் மழை காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு நீர்தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட உள்ளது. அவற்றில் இருந்து 20 கேமராக்களை நிக்கல்சன் கால்வாய் அருகே வைக்கப்படும்.
ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்
மாநகராட்சி பகுதியில் மோட்டார் சைக்கிள், ஜீப்பை அகற்றாமல் சாலைகள் அமைத்தது குறித்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அதையடுத்து அனைத்து சாலை ஒப்பந்ததாரர்களையும் அழைத்து அனைத்து வாகனங்களையும் அப்புறப்படுத்திய பின்னரே சாலை அமைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை அகற்றாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர், அந்த மண்டல உதவி பொறியாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சாலை அமைக்கும் போது அந்த பகுதி மக்களுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் கன்சால்பேட்டையில் 50 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
சென்னை-பெங்களூரு அணுகுசாலையோரம் வாகனங்களை நிறுத்தி பழுது பார்க்கக்கூடாது. மீறினால் அந்த கடைக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.