கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு


கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்பப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்தார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். சில மாற்றுத்திறனாளிகள் நடக்க முடியாமல் தவழ்ந்து வரக்கூடிய நிலையில் உள்ளவர்களிடம் அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே கலெக்டர் நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், மாதாந்திர ஓய்வூதியம், இணைப்புச்சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, கை மிதிவண்டி, செயற்கை கை மற்றும் கால் உபகரணங்கள், நவீன காதொலி கருவி, ஊன்றுகோல், பார்வையற்றவர்களுக்கான கைப்பேசி, தொழில் தொடங்க கடனுதவி, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் உள்ளிட்டவை தொடர்பாக 453 மனுக்கள் பெறப்பட்டன.

14 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, 3 சக்கர சைக்கிள், காதொலி கருவிகள் என ரூ.1.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகன் வழங்கினார். தொடர்ந்து, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பயன்பெறும் வகையில் 14 பேருக்கு வேலைவாய்ப்பிற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

அதிகாரிகளுக்கு நோட்டீசு

கூட்டத்தில் ஆவின் பாலகம் கோரி மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்த நிலையில் அம்மனு மீது பரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த கலெக்டர் மோகன், ஏன் அதிகாரிகள் பங்கேற்கவில்லை? இதுசம்பந்தமாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார்கள். இக்கூட்டம் சம்பிரதாயத்திற்காக நடக்கவில்லை என்று கடிந்துகொண்டார். மேலும் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் யார், யார் என்ற விவரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட துறையின் இயக்குனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி வைக்கப்படும் என்று எச்சரித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story