வேட்டை தடுப்பு காவலர்களுக்கு விருது அறிவிப்பு
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட வேட்டை தடுப்பு காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதியில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த 4 பேரை கடந்தாண்டு புலி கடித்து கொன்றது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் புலியை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், புலி பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்ததால் உடனடியாக பிடிக்க முடியவில்லை. பின்னர் 21 நாட்களுக்கு பிறகு அக்டோபர் மாதம் 15-ந் தேதி மசினகுடி-முதுமலை எல்லையோர வனத்தில் பதுங்கி இருந்த டி-23 என்ற புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர். ஆட்கொல்லி புலியை பாதுகாப்பாக பிடிப்பதற்கு சிறப்பாக செயல்பட்ட ஆதிவாசி இனத்தை சேர்ந்த வனக்காப்பாளர் மீன் காலன், வேட்டை தடுப்பு காவலர்கள் மாதன், பொம்மன் ஆகியோருக்கு விருது வழங்க தமிழக வனத்துறை பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 3 பேருக்கும் விருது வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. இதனால் முதுமலை வன அதிகாரிகள், வனக்காப்பாளர் மீன் காலன், வேட்டை தடுப்பு காவலர்கள் மாதன், பொம்மன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர். வருகிற 29-ந் தேதி உலக புலிகள் தின விழா மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் வன அகாடமியில் நடக்கிறது. விழாவில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில், விருது வழங்கப்படுகிறது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.