பிரபல கொள்ளையன் கைது
சேலத்தில் வழிப்பறி, வீடு புகுந்து திருடிய வழக்கில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ வெள்ளி, மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டன.
வழிப்பறி
சேலம் அருகே வீராணம் சேனைநகர் வளையக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). தேங்காய் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் டவுன் ராஜகணபதி கோவில் அருகில் தேங்காய் வியாபாரம் செய்தார். அங்கு வந்த வாலிபர், முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.450-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே, சேலம் டவுன் பார்க் தெருவை சேர்ந்த பாசில் (25) என்பவர் டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சம்பவத்தன்று இரவு தனது வீட்டிற்குள் 2 பேர் புகுந்து 2 செல்போன்கள், ஒரு ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி செயின், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர் என கூறியிருந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொள்ளையன் கைது
இந்த 2 வழக்குகளிலும் கைவரிசை காட்டியது பிரபல கொள்ளையன் சேலம் சின்னேரிவயல்காடு சினிமாநகரை சேர்ந்த பாண்டியன் (35), அவரது கூட்டாளியான அன்னதானப்பட்டியை சேர்ந்த கொரில்லா செந்தில் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு பிரபல கொள்ளையன் பாண்டியன் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த மாதம் செவ்வாய்பேட்டை தொட்டுசந்திரையர் தெருவை சேர்ந்த பாஸ்கர் (56) என்பவரது வீட்டிற்குள் புகுந்து 2 கிலோ வெள்ளியை திருடியதும், செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள், அம்மாப்பேட்டையில் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. பாண்டியனிடம் இருந்து ஒரு கிலோ வெள்ளி, ஒரு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
வலைவீச்சு
அதேசமயம், தலைமறைவான அவரது கூட்டாளி கொரில்லா செந்திலை வலைவீசி தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள பாண்டியன் மீது ஏற்கனவே மாநகரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.