குமரியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது


குமரியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது
x

மேலகிருஷ்ணன்புதூரில் குமரியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார். இவருக்கு கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

மேலகிருஷ்ணன்புதூரில் குமரியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார். இவருக்கு கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கோவிலில் கொள்ளை

பறக்கை அருகே உள்ள புல்லுவிளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு சமுத்திரராஜன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 7-ந் தேதி இரவு பூஜைகள் முடிந்த பின்பு கோவிலின் கதவை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் பூசாரி கோவிலுக்கு வந்தபோது வெளிப்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் முத்தாரம்மன் நெற்றியில் இருந்த 4 கிராம் எடையுள்ள 2 தங்க பொட்டுகள், 8 கிராம் எடையுள்ள 2 தங்க தாலி சங்கிலி மற்றும் 8 வெண்கல குத்து விளக்குகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வந்தனர்.

போலீசார் ரோந்து

இந்தநிலையில் நேற்று காலையில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் மேலகிருஷ்ணன்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் சந்தேகப்படும் படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் கூறினார்.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈத்தாமொழி அருகே உள்ள தெற்குசூரங்குடி, கீரிவிளையை சேர்ந்த அரவிந்த் பிரியன் (வயது21) என்பதும், புல்லுவிளை முத்தாரம்மன் கோவிலில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து 4 குத்து விளக்குகளும், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

25 வழக்குகள்

அரவிந்த் பிரியன் ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கோவில்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, திருட்டு உள்பட 25 வழக்குகள் உள்ளன. இவரது பெயர் ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story