அகோரி வேடத்தில் சுற்றி திரிந்தபிரபல ரவுடி கைது


அகோரி வேடத்தில் சுற்றி திரிந்தபிரபல ரவுடி கைது
x

குமாரபாளையத்தில் அகோரி வேடத்தில் சுற்றி திரிந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

குமாரபாளையம்

பிரபல ரவுடி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் தனிப்படை போலீசார் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு அகோரி உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் அந்த அகோரி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அகோரி வேடத்தில் இருந்தவர் சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி முஸ்தபா என்பது தெரியவந்தது. இவர் மீது நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10-க்கு மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளதும் தெரியவந்து உள்ளது.

அகோரி கைது

இதுகுறித்து போலீசாரிடம் முஸ்தபா கூறுகையில், என்னை கொலை வழக்குகளில் தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து நான் காசிக்குச் சென்று முஸ்தபா என்கிற முகாமது ஜிகாத் என்கிற எனது பெயரை ஜிக்லினத் அகோரி என்று பெயரை மாற்றிக்கொண்டேன். பின்னர் அகோரியாக ஊர் ஊராக சுற்றி திரிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்.

மேலும் திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில் 2 கொலை குற்றங்களிலும், ராசிபுரத்தில் நடைபெற்ற 2 கொலை வழக்குகளிலும், பரமத்தியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கிலும் மற்றும் நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொலை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டு உள்ளேன். இவ்வாறு அவர் போலீசில் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் முஸ்தபாவை கைது செய்து திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story