திண்டுக்கல்லில் நாவல் பழ விற்பனை அமோகம்


திண்டுக்கல்லில் நாவல் பழ விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 26 Jun 2023 2:30 AM IST (Updated: 26 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நாவல் பழ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்

மருத்துவ குணம் நிறைந்த மரங்களில் நாவல் மரமும் ஒன்றாகும். இதில் இருந்து கிடைக்கக்கூடிய நாவல் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தவையாக இருக்கின்றன. இந்த நாவல் பழ சீசன் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாத இறுதி வரை இருக்கும். தற்போது திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் நாவல் மரங்களில் பூக்கள் பூத்து காய்கள் தென்பட தொடங்கியுள்ளன. இதன் காரணமாக உள்ளூரில் நாவல் பழ வரத்து குறைவாக இருக்கிறது. ஆனால் பெங்களூரு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நாவல் பழங்கள் திண்டுக்கல்லுக்கு விற்பனைக்காக வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகில், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோர கடைகளில் நாவல் பழ விற்பனை தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது. உள்ளூர் பழங்களை விட வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் நாவல் பழங்கள் அளவில் பெரியதாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். திண்டுக்கல்லில் நாவல் பழம் கிலோ ரூ.160 முதல் ரூ.200- வரை விற்பனை செய்யப்படுகிறது. வசதி படைத்தவர்கள் விலையை பொருட்படுத்தாமல் நாவல் பழங்களை வாங்கிச்சென்றாலும் ஏழை மக்களுக்கு நாவல் பழங்கள் எட்டா கனியாகவே உள்ளது.


Related Tags :
Next Story