முககவசம் அணிவது அவசியமானதா?
முககவசம் அணிவது அவசியமானதா?
திருப்பூர்
உலகையே உலுக்கிய ஒற்றை வார்த்தை கொேரானா. அண்டை அயலாருடன் பேசக்கூட முடியாமல் வீட்டிலேயே முடங்க வைத்த நோய். வீதியில் கூட நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முககவசம் அணியாமல் வீதியில் நடமாடினால் அபராத நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. அந்த அளவுக்கு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை அரசு செய்தது. ஊரடங்கால் வேலையிழந்து, வாழ்விழந்தவர்கள் ஏராளம். மக்கள் வாழ்க்கை முறையே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என்று குறிப்பிடும் வகையில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. பொருளாதார வளர்ச்சிக்கும் தடைக்கல்லாகி போனது.
கொரோனா நோய் பரவல் நேரத்தில் நோய் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிக்கு ஏங்கி நின்றவர்கள் பலர். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு முதல் தவணை, 2-வது தவணை செலுத்தப்பட்டு கடைசியாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கு மக்களிடம் ஆர்வம் இல்லாமல் போனது. அதற்கு காரணம் கொடூரமாக பரவிய கொரோனா கட்டுக்குள் வந்ததால் தான். இருப்பினும் கொரோனா முற்றிலுமாக நம்மை விட்டு இன்னும் சென்றுவிட வில்லை. இன்னும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேண்டும் என்றால் குறைவாக இருக்கலாம். ஆனால் கொரோனா என்ற கொடிய நோய், அடிபட்ட சிங்கம் ேபால பழிவாங்க காத்திருக்கிறது.
அலட்சியம்
கொரோனா கொடூரத்தை அறிந்ததன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீதிக்கு வந்தால் முககவசத்தை கட்டாயம் அணிந்து சென்றனர். ஆனால் பாதிப்பு குறைய, குறைய மக்களிடமும் விழிப்புணர்வும் குறைந்து போய்விட்டது. முககவசத்தை அணிவதை தற்போது முற்றிலும் தவிர்த்து விட்டனர். முககவசம் கட்டாயம், அணியாவிட்டால் அபராதம் என்று தற்போது அரசு அறிவிக்கவில்லை. ஆனால் முககவசம் அணிவதன் அவசியத்தை அரசு ஒவ்வொரு முறையும் உணர்த்தியே வருகிறது. அதை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியமாகவே இருக்கிறார்கள்.
குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிவது சிறந்த பயனைக்கொடுக்கும். கொரோனாவின் வீரியம் குறைந்தபோதிலும் தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்புளுயன்சா என்ற வைரஸ் மூலமாக புளு காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. குறிப்பாக சிறுவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்கு தொடர்காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு காணப்படுகிறது. திருப்பூர் மாநகர பகுதிகளில் புளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் கண்கூடாக காண முடியும். காற்றின் மூலமாகவே இந்த கிருமிகள் பரவும்.
புளு காய்ச்சல் பரவல்
இதற்கு நமக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது முககவசம் ஆகும். கொரோனாவுக்காகவே முககவசம் அணிய வேண்டும் என்ற நிலையை மக்கள் மாற்ற வேண்டும். புளு காய்ச்சலும் காற்றின் மூலமாகவே பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தும்மல் எடுக்கும்போது பரவுகிறது. பொது இடங்களில் அவர்கள் முககவசம் அணியாவிட்டால் அவர்கள் மூலமாக பலருக்கு பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாகவே புளு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகள், ஜவுளி, நகைக்கடைகள், ரெயில், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பொது இடங்களுக்கு வருபவர்கள், கூட்ட நெரிசலில் சிக்குபவர்கள் முககவசம் அணிந்திருப்பது அவசிமாகியுள்ளது. அலட்சியத்தால் வரும் ஆபத்தை மக்கள் உணராமல் இருக்கிறார்கள்.
முககவசம் அணிவது அவசியம்
இதுகுறித்து திருப்பூர் மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் கூறியதாவது:-
முககவசம் என்பது கொரோனா பரவலை மட்டும் தடுக்காமல் புளு காய்ச்சல் உள்ளிட்ட காற்றின் மூலம் பரவும் நோய் பரவலையும் தடுக்கும். குறிப்பாக பொது இடங்களுக்கு செல்பவர்கள் முககவசம் அணிவது அவசியம். அரசு கட்டாயப்படுத்தாமல் உள்ளதே தவிர, அதன் அவசியத்தை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், உணவகங்கள் மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்களில் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முககவசம் அணிய வேண்டும் என்றும் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் கடைகளுக்கு முன்பு ஒட்டப்பட்டு உள்ளது.
இருப்பினும் மக்கள் முககவசம் அணிவதை தவிர்த்து வருகிறார்கள். மாநகராட்சி சுகாதாரத்துறை, காவல்துறையும் இதை வலியுறுத்தி வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் வெளியூர் செல்கிறார்கள். பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. கடைவீதிகளில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதுபோன்ற பண்டிகைகாலங்களிலாவது பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவது மிகவும் அவசியம். நோய் பரவலை தவிர்க்க முககவசம் அணிவது கட்டாயமும் கூட. இந்த சமுதாயம் பாதுகாப்பானதாக இருக்க ஒவ்வொருவரும் முககவசம் அணிய வேண்டும். இதை மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நோய் பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அதை மக்கள் ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் வெற்றியை பெற முடியும். இதை மக்கள் உணர வேண்டும்.