இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோர முடியும்
இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோர முடியும் என்ற தமிழக அரசின் புதிய உத்தரவு குறித்து அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பணியைச் செய்து முடிப்பதற்கான செலவு விவரங்களை, ஒருவர் ஓர் அமைப்புக்கு தெரியப்படுத்தும் முழு விவர அட்டவணை தாங்கிய ஆவணமே ஒப்பந்தப் புள்ளியாகும்.
ஒப்பந்தப்புள்ளி பெட்டி
பொதுவாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத் துறை, வீட்டு வசதித் துறை, குடிசை மாற்றுவாரியம், விவசாய பொறியியல் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புதிய கட்டுமானப்பணிகள், பழுதுபார்ப்பு உள்ளிட்ட வேலைகளைச் செய்வதற்கு அந்தந்தத் துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.
இதில் கலந்துகொண்டு பணிகளை செய்ய விரும்பும் ஒப்பந்ததாரர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் ஒப்பந்தப்புள்ளி பெட்டிகளில் பணிகளை நிறைவேற்றி தருவதற்கான தொகையைக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்வார்கள்.
ஆணைக்கடிதம்
குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒப்பந்தப்புள்ளி பெட்டியை அதிகாரிகள் திறந்து, அதில் குறைந்த தொகை பதிவு செய்துள்ள தரமான ஒப்பந்ததாரரை தேர்வு செய்து அவருக்கு பணிகளை நிறைவேற்றி தருவதற்கான ஆணைக்கடிதம் வழங்குவார்கள். இதனை பெற்ற ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் வேலையை முடித்துத் தருவார்கள். ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் விண்ணப்பங்களை போடமுடியாமல் சில இடங்களில் ஒப்பந்ததாரர்களிடையே வாக்குவாதமும், சண்டை சச்சரவுகளும் நடப்பது வழக்கம். இதுதான் நடைமுறையில் இருந்து வந்தது.
ஒப்பந்தப்புள்ளிக்கு ஆன்லைன் முறை
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்து, அனைத்து அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிக்கும் ஆன்லைன் முறையை கடந்த 1-ந் தேதியில் இருந்து கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதற்கு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் இனி http://tntenders.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்கள் வருமாறு:-
முறைகேடு புகார் வராது
நெடுஞ்சாலைத்துறையின் ஓய்வுபெற்ற அலுவலர் விழுப்புரத்தை சேர்ந்த நடராஜன்:-
ஒளிவு மறைவற்ற சிறப்பான நிர்வாகத்தை சீரமைக்கும் பொருட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியின் ஆட்சியில் துறை மூலம் கட்டுமான பொருட்கள் வழங்க தேவையில்லை எனவும் சம்பந்தபட்ட ஒப்பந்ததாரர்களே வாங்கிக்கொள்ளுமாறு ஆணையிடப்பட்டது. ஆனால் தர நிர்ணயம் மட்டும் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இத்திட்டம் கொண்டு வரப்பட்டதால் ஓரளவு ஊழல் ஒழிக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கும் நல்லபெயர் கிடைத்தது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் மூலம் செய்யப்படும் ஒப்பந்த வேலைகள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என்கிற புதிய உத்தரவு வந்துள்ளது. இந்த உத்தரவினால் அரசின் மீது எவ்வித முறைகேடான புகார்கள் வராதவண்ணம் செவ்வனே ஒப்பந்தப்பணிகளை செயல்படுத்த இயலும். இந்த உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது.
வெளிப்படை தன்மை
விழுப்புரத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் அருண்சுந்தர்:-
மின்னணு முறையில் ஒப்பந்தங்கள் பெறப்படும்போது வெளிப்படை தன்மையுடன் நடைபெறும். எங்களைப்போன்ற படித்த இளைஞர்கள், அரசு ஒப்பந்த பணிகளை பெறுவதற்கும், தற்போதைய காலக்கட்டத்திற்கும் வரவேற்கத்தக்கது. மேலும் இதில் ஒவ்வொரு முறையும் தகவல்களை ஒப்பந்ததாரர்கள் உள்ளீடு செய்வதற்கு பதிலாக ஒருமுறை பதிவு முறையை பின்பற்றி ஒவ்வொரு ஒப்பந்தத்தின்போதும் அப்டேட் செய்கிற வசதியை மேம்படுத்த வேண்டும். செல்போன் செயலியின் மூலம் ஒப்பந்தப்புள்ளி தகவல்களை பெறுவதற்கு வழிவகை செய்தால் சிறப்பானதாக இருக்கும்.
தரமான ஒப்பந்ததாரர்கள்
திண்டிவனம் அரசு ஒப்பந்ததாரர் நந்தகுமார்:-
ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. தற்போது 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள டெண்டர்கள் வைப்புத்தொகை செலுத்தி ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளியில் கலந்துகொள்வதற்கு முன்பாக குவாலிட்டி கண்ட்ரோல் சான்றிதழ் எடுக்கப்படுகிறது. இதனால் ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி கோரும்போது கலந்துகொள்வதற்கு முன்னதாகவே தரமான ஒப்பந்ததாரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். ஆன்லைன் டெண்டர்களில் மாற்றி தவறுகள் செய்ய முடிவதில்லை. ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளியில் வைப்புத்தொகை செலவினம் இல்லாமல் இருப்பதால் ஒப்பந்ததாரர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளியில் போட்டிகள் அதிகமாக நிலவுவதால் குறைவாக அந்த ஒப்பந்தப்புள்ளியை குறிப்பிட்டு பணியை எடுப்பதில் ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இது அரசுக்கும் வருமானத்தை தேடித்தருகிறது.