நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது
நத்தக்காடையூர் அருகே நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் புதுவெங்கரையாம்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
நொய்யல் ஆறு
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் உள்ள தாழ்வான தரைப்பாலத்தை கடந்து நொய்யல் ஆறு செல்கிறது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த நொய்யல் ஆற்றின் தாழ்வான தரை பாலத்தின் வழியாக தாண்டாம்பாளையம், கந்தசாமிபாளையம், சிவகிரி, நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் நான்கு சக்கர, இருசக்கர வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு, பகல் நேரங்களில் தெடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் நொய்யல் ஆற்றின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்து உள்ள கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை வனப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் பலத்த மழை பெய்து வருகிறது.
மழைநீர் வெள்ளப்பெருக்கு
இதனால் நேற்று முதல் நொய்யல் ஆற்றில் அதிக மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கோவையில் இருந்து நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் திருப்பூர் வழியாக வந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு சென்று சேருகிறது. நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் அதிக அளவில் வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் நேற்று காலை முதல் வரும் மழை நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளயம் கிராமத்தில் செல்லும் நொய்யல் ஆற்றில் நேற்று மதியம் 12 மணி முதல் மழைநீர் திடீரென்று அதிக அளவில் வந்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறி பாய்ந்து கரைபுரண்டு செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதன் காரணமாக தரை பாலத்தின் வழியாக செல்லும் பகுதிக்கான சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதனால் கனரக, இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.