நொய்யல் ஆற்றில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு
நத்தக்காடையூர் அருகே செங்குளம் - பழைய கோட்டையில் நொய்யல் ஆற்றில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆகாய தாமரை
நத்தக்காடையூர் அருகே உள்ள செங்குளம் - பழையகோட்டையில் நொய்யல் ஆறு செல்கிறது. கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யும் போது நீர்வரத்து அதிக அளவில் இருக்கும். ஒரத்துப்பாளையம் நொய்யல் அணையில் தற்போது தண்ணீர் எதுவும் தேக்கி வைக்கப்படாமல் வரும் தண்ணீர் அனைத்தும் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது.
நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள உயர்மட்ட கனரக போக்குவரத்து பாலத்தின் மேல்புறம் நடுவில் ஒரு கரையை தொட்டபடி ஆகாயத்தாமரைகள் காட்சியளிக்கிறது. இதனால் நொய்யல் ஆற்றில் சீரான நீரோட்டம் தடைபட்டு பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தண்ணீர் சீராக செல்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆகாயத்தாமரைகள் பரவி உள்ள இடத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த இடத்தில் கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் குறித்து நீந்தி விளையாடி வருகின்றனர். மாணவர்களுக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், ஆகாய தாமரைகள் வேர்களில் கால் சிக்கி தத்தளித்து உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
துரித நடவடிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் நொய்யல் ஆற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.