60 ஆண்டுகள் ஆகியும் ஒளிராத நொய்யல் ஆற்றுப்பாலம்
60 ஆண்டுகள் ஆகியும் நொய்யல் ஆற்றுப்பாலத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல் ஆற்றுப்பாலம்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள குறுக்கு சாலைபகுதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகளின் நலன் கருதி நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பாலத்தில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இரவு முழுவதும் இந்த பாலத்தின் பகுதி நெடுகிலும் இருள் சூழ்ந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக திருச்செந்தூர், நெல்லை, ராமேஸ்வரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்களும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு தனியார் பஸ்களும் சென்று வருகின்றன. அதேபோல் இந்த பாலத்தின் வழியாக கல்குவாரிகளில் செயல்பட்டு வரும் லாரிகள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இரவு பகலாக சென்று வருகின்றன. இந்த பாலத்தில் மின்விளக்கு அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதியில் அதிக அளவில் சட்ட விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள் அமைத்து திருட்டு பயத்திலிருந்து வாகன ஓட்டிகளை காப்பாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
சரி செய்ய இயலாது
குறுக்கு சாலை பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வீரக்குமார்:- நான் குறுக்கு சாலையில் பல ஆண்டுகளாக சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறேன். சரக்கு ஆட்டோவில் பல்வேறு வகையான பொருட்களை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொருட்களை இறக்கிவிட்டு இரவில் வெகு நேரம் கழித்துகூட இந்த வழியாக வருகிறேன். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆகிறது. நான் பிறப்பதற்கு முன்பே பாலம் கட்டப்பட்டுவிட்டது. ஆனால் பாலத்திற்கு மின்விளக்குகள் பொருத்தாததால் பாலம் நெடுகிலும் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் திருடர்கள் பயம் அதிகரித்துள்ளதுடன் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் மின்விளக்கு அமைத்தால் என்னைப்போன்றோருக்கு உதவிகரமாக இருக்கும்.
ஆம்புலன்ஸ் டிரைவர் மதன்:- நான் ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை கொண்டு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் சேர்த்து விட்டு வருகிறேன். இந்த நொய்யல் ஆற்றுப்பாலத்தின் வழியாக இரவு, பகல் பாராமல் ஆம்புலன்சை ஓட்டிச்சென்று வருகிறேன். இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் மின்விளக்கு பொருத்தாததால் இருள் சூழ்ந்துள்ளது. இந்த வழியாக வரும் வாகனங்கள் பாலத்தில் வரும்போது பஞ்சர் ஆனாலும், என்ஜின் பழுதாகி போனாலும் பாலத்தில் நின்றபடியே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நள்ளிரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாததால் எதையும் சரி செய்ய இயலாது. பாலத்தையொட்டி முட்புதர்கள் உள்ளது. இந்த மறைவிடத்தில் திருடர்கள், சமூக விரோதிகள் மறைந்திருந்து வாகனங்களை தடுத்து நிறுத்தி கொள்ளையடிக்கும் வாய்ப்பும் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரூர் செல்லும் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சண்முகம்:- இப்பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இரவு நேரங்களில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் இவ்வழியாக காரில் செல்லும்போது வழிநெடுகிலும் இருட்டாக உள்ளது. இதனால் பயமும், அச்சமும் எங்களுக்கு ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.
முத்தனூர் பகுதியை சேர்ந்த சுதா:- நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் பெண்கள் யாரும் இந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. வெளியூர்களுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு இரவு நேரத்தில் இந்த வழியாக வரும்போது உயிர் பயம் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்றி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் நாங்கள் முடிந்தவரை வெளியூர்களுக்கு சென்றால் பகல் நேரத்தில் வாகனங்களில் வந்து விடுகிறோம். உறவினர் வீடுகளுக்கு சென்று இரவு வெகுநேரம் ஆகும் போது உறவினர்கள் வீடுகளிலேயே தங்கிவிட்டு, காலையில் தான் வருகிறோம். இதனால் உடனடியாக இப்பகுதியில் மின்விளக்குகள் அமைத்து எங்களின் பயத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.