என்.டி.பி.எல். அனல்மின்நிலைய தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு


என்.டி.பி.எல். அனல்மின்நிலைய தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

வேலைநிறுத்தம்

தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் வழங்குவது போன்று என்.டி.பி.எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ, பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் கடந்த 13-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனால் அனல்மின்நிலையத்தில் மின்உற்பத்தி பாதியாக குறைந்தது. இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் என்.டி.பி.எல் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்தவித சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இதனால் நேற்று 8-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் மத்திய தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் அருண்குமார் தலைமையில் சென்னையில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் சி.ஐ.டி.யு மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், செயலாளர் ரசல், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் ராஜேந்திரன், என்.டி.பி.எல் கிளை செயலாளர் அப்பாத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் என்.டி.பி.எல் சார்பில் மூத்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.சுமார் 4½ மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.

ஒத்திவைப்பு

ஒப்பந்த தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சினையை தீர்க்க குறைதீர்க்கும் கமிட்டி அமைக்கவும், அதில் சங்க பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படுவார் என்பது உள்ளிட்ட முடிவுகளும் எட்டப்பட்டன. இதனை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தெரிவித்து உள்ளது.

மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மே 5-ம் தேதிக்குள் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் மே 5-ந் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் என்.டி.பி.எல் கிளைச் செயலாளர் அப்பாதுரை தெரிவித்து உள்ளார்.


Next Story