கூடலூர் பகுதியில் நூதன போராட்டம் எதிரொலி: சாலையில் பள்ளங்களை சீரமைக்கும் பணி தொடக்கம்


கூடலூர் பகுதியில் நூதன போராட்டம் எதிரொலி:  சாலையில் பள்ளங்களை சீரமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் நூதன போராட்டம் நடைபெற்றதன் எதிரொலியால் சாலைகளில் உள்ள பள்ளங்களை சமப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் நூதன போராட்டம் எதிரொலியால் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

குண்டும் குழியுமான சாலைகள்

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சாலைகள் செல்கிறது. இதனால் கேரள மாநில மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதி மக்கள் மருத்துவம் உள்பட பல்வேறு தேவைகளுக்காக தினமும் கேரளா சென்று திரும்புகின்றனர். இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் வரை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதேபோல் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகளும் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கூடலூர் பகுதி மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நூதன போராட்டம்

இதைத்தொடர்ந்து கடந்த 18-ம் தேதி கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தியவாறு நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நாடுகாணி பஜாரில் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் பெருமன்றத்தினர், மின்கம்பத்தில் உருவ பொம்மையை தொங்கவிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு நூதன போராட்டங்கள் நடைபெற்றதன் எதிரொலியால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகளில் உள்ள பள்ளங்களை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். அதிகாரிகளின் நடவடிக்கையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story