அரூர் அருகே கயிற்றால் கழுத்தை இறுக்கி விவசாயி கொலை?-போலீசார் விசாரணை


அரூர் அருகே கயிற்றால் கழுத்தை இறுக்கி விவசாயி கொலை?-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 11:57 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே தோட்டத்துக்கு காவலுக்கு சென்ற விவசாயி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டியை அடுத்த சிட்லிங் பகுதியை சேர்ந்த ஆண்டி மகன் மனோகரன் (வயது 55). விவசாயி. இவருக்கு தங்கமயில் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். மனோகரன் தினமும் இரவு அந்த பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்துக்கு காவலுக்கு செல்வது வழக்கம்.

அதன்படி அவர் நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு காவலுக்காக சென்றார். பின்னர் மறுநாள் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மனோகரனின் தந்தை ஆண்டி, விவசாய தோட்டத்துக்கு சென்று பார்த்தார்.

கழுத்தில் காயம்

அங்கு மனோகரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவருடைய கழுத்தில் கயிற்றால் இறுக்கிய காயம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆண்டி, கோட்டப்பட்டி போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதனிடையே மனோகரனின் உறவினர்களும், பொதுமக்களும் அந்த பகுதியில் திரண்டனர். இதையடுத்து போலீசார் மனோகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை?

மனோகரன் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்படி அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கு காரணம் என்ன?, கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விவசாய நிலத்துக்கு காவலுக்கு சென்ற விவசாயி மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story