காரிமங்கலம் அருகே பயங்கரம் நிலத்தகராறில் 2 விவசாயிகள் கொலை-போலீசார் விசாரணை


தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே நிலத்தகராறில் 2 விவசாயிகள் கொலை செய்யப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிலத்தகராறு

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த ஜொள்ளம்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி குஞ்சாயி. இந்த தம்பதிக்கு சேட்டு (46), சம்பத் (44) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

குஞ்சாயியின் தம்பி தங்கவேல் (55). விவசாயியான இவர், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மகன்களை பிரிந்து ஜொள்ளம்பட்டியில் தனியாக வசித்து வந்தார். மணிக்கும், தங்கவேலுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் மணி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசித்து வரும், தங்கவேலின் மனைவி மற்றும் மகன்களுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பதாக கூறினார். ஆனால் அவர் இதுகுறித்து தங்கவேலிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

ஆத்திரம்

இதனை அறிந்த தங்கவேலுக்கு, மணி மீது ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் தனக்கு நிலத்தை கொடுக்காமல், மனைவி மற்றும் மகன்களுக்கு கொடுப்பதை அறிந்து, கடும் கோபமடைந்தார். தொடர்ந்து மணி மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இந்தநிலையில் மணி நேற்று காலை 6.30 மணிக்கு, தனது பேத்தியான 10-ம் வகுப்பு மாணவி இந்துஜாவை (15), மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்றார். பெரியாம்பட்டி சாலையில் சென்றபோது, அங்குள்ள வயலில் பதுங்கி இருந்த தங்கவேல் திடீரென மொபட்டை மறித்தார். மேலும் நிலம் தொடர்பாக மணியுடன் தகராறில் ஈடுபட்டார்.

வெட்டிக்கொலை

இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தங்கவேல், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணியை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கழுத்து, கை, கால் என பல இடங்களில் மணிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி இந்துஜா, அங்கிருந்து தனது வீட்டுக்கு ஓடினார். அங்கு குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதார்.

இதனிடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததில், மணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து தங்கவேல் அரிவாளை ஏந்தியபடி ஆக்ேராசத்துடன் மணியின் வீட்டுக்கு சென்றார்.

டிராக்டர் டயரில் சிக்கி சாவு

வழியில் மணியின் மூத்த மகன் சேட்டு, வயலில் இருந்து டிராக்டரில் வந்து கொண்டிருந்தார். அவரையும் மறித்து தங்கவேல் அரிவாளால் வெட்டினார். அதில் அவரது காலில் வெட்டு விழுந்தது. இதனிடையே சேட்டு ஓட்டி வந்த டிராக்டரின் சக்கரத்தில் தங்கவேல் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்து, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அக்கம் பக்கத்தினர் சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரட்டை கொலை குறித்து காரிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இரட்டை கொலை குறித்த தகவல் பரவிய நிலையில் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

கொலை செய்யப்பட்ட மணி, தங்கவேல் ஆகியோர் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் சேட்டுவிடம் விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி

விசாரணையில், போலீசில் சேட்டு கூறும்போது, எனது தந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்து, நான் டிராக்டரில் வீட்டுக்கு வேகமாக சென்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென வழிமறித்த தங்கவேல் அரிவாளால் என்னை சரமாரியாக வெட்டினார். அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, அவர் எனது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியானார் என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேல் டிராக்டரை ஏற்றி கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் சிக்கி பலியானாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.

இந்த இரட்டை கொலை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story