செவிலியர்கள் கண்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்
தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் கண்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொரோனா சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை நிரந்தர தன்மையுடைய பணியிடத்தில் பணி அமர்த்த வேண்டும் என்று கோரி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நேற்று மாலை தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சரண்யா கோரிக்கை குறித்து பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மாவட்ட இணை செயலாளர் மாடசாமி, வேலைவாய்ப்பு துறை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மார்த்தாண்ட பூபதி, தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் சேகர், ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட துணைத்தலைவர் கோபி ஆகியோர் வாழ்த்தி பேசினா். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திருமலை முருகன் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கண்களை கருப்பு துணியால் கட்டி இருந்தனர். சங்க மாவட்ட பொறுப்பாளர் பிரபாவதி நன்றி கூறினார்.