முதல்-அமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பிய செவிலியர்கள்
நெல்லையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு, செவிலியர்கள் தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் எம்.ஆர்.பி.மூலம் தேர்வு செய்யப்பட்ட 2477 செவிலியர்கள் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு நிரந்தரமான தற்காலிக பணி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
9-வது நாளாக நேற்று தமிழக முதல்-அமைச்சருக்கு தங்களுக்கு நிரந்தர தற்காலிக பணி வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இருந்து தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டனர்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் எம்.ஆர்.பி.மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் தபால் நிலையத்தில் தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செவிலியர்கள் தங்கள் கைக்குழந்தையுடன் கலந்து கொண்டனர். செவிலியர்கள் கண்ணீர் மல்க தமிழக முதல்-அமைச்சருக்கு அட்டையை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செவிலியர்கள் கூறுகையில், "கொரோனா தொற்று காலத்தில் யாரும் பணிக்கு வராத காலத்தில் நாங்கள் தைரியமாக மக்களை பாதுகாப்பதற்காக இந்த பணிக்கு வந்தோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் எங்களை நிரந்தரம் செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் தற்போது எங்களை கண்டுகொள்ளவில்லை. எனவே பணி வழங்க வலியுறுத்தி நாங்கள் முதல்-அமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.