நர்சிங் மாணவி தற்கொலை விவகாரத்தில் அ.ம.மு.க. கவுன்சிலர் கைது


நர்சிங் மாணவி தற்கொலை விவகாரத்தில் அ.ம.மு.க. கவுன்சிலர் கைது
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:46 PM GMT)

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரத்தில் போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என அவரது பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த அ.ம.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் பகுதியில் வசித்து வந்த 18 வயதுடைய மாணவி, சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2022-ல், அ.ம.மு.க. நகர செயலாளரும் வளவனூர் பேரூராட்சியின் 11-வது வார்டு கவுன்சிலருமான கந்தன் (40) என்பவருடைய பாத்திரக்கடையில் வேலை செய்தார்.

அப்போது அவர், அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி தவறாக பழகி வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், அந்த மாணவியை சென்னை சூளைமேட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து நர்சிங் படிப்பு படிக்க சேர்த்துள்ளனர். ஆனாலும் கந்தன், அந்த மாணவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று மாணவி, தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அ.ம.மு.க. கவுன்சிலர் கைது

இதையறிந்த கந்தனின் உறவினரான வளவனூர் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர், கந்தன் தூண்டுதலின்பேரில் மாணவியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவரது பெற்றோரிடம், கந்தன் மீது போலீசில் புகார் ஏதும் கொடுக்கக்கூடாது என்று மிரட்டினார். இருப்பினும் மாணவியின் சாவுக்கு காரணமான கந்தனை கைது செய்யக்கோரி அவரது பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த கந்தன், விஷம் குடித்ததாக கூறி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் கந்தன், விஜயன் ஆகிய இருவரின் மீதும் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கந்தனுக்கு சிகிச்சை முடிந்து உடல்நலம் சரியாகிவிட்டதாக டாக்டர்கள் கூறியதன்பேரில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story