நர்சிங் மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்


நர்சிங் மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

நர்சிங் மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

திருச்சி

உலக புற்றுநோய் தினத்தையொட்டி திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சார்பில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலத்தில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் அருண்ராஜ் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டு, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர்.

இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் நேரு நிருபர்களிடம் கூறும்போது, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் 100 சதவீதம் அதில் இருந்து விடுபடலாம். புற்றுநோய் குறித்த அறிகுறிகளை பொதுவாக யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாததால் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய சிறிய அளவிலான மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த புற்றுநோய் குறித்த அறிகுறிகளுக்கான அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்திருந்தால் புற்றுநோயை தடுக்க ஒரு சிறந்த வழியாக அமையும் என்றார்.


Next Story