ஜாதிக்காய் சீசன் தொடங்கியது
குமரியில் ஜாதிக்காய் சீசன் தொடங்கியது. கடந்த ஆண்டை விட விற்பனை அமோகமாக இருக்கிறது.
குலசேகரம்:
குமரியில் ஜாதிக்காய் சீசன் தொடங்கியது. கடந்த ஆண்டை விட விற்பனை அமோகமாக இருக்கிறது.
கலப்பு பயிராக ஜாதிக்காய்
நறுமணப் பயிர்களில் ஜாதிக்காய், கிராம்பு, மிளகு, ஏலக்காய், வனிலா, கோகோ, காபி, இலவங்கப் பட்டை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இப்பயிர்கள் உலகளாவிய சந்தை மதிப்பு கொண்டவையாகும். பண்டைக் காலங்களில் கடல் கடந்து வாணிபம் செய்தவர்களின் முக்கிய வர்த்தக பொருட்களாக இந்த பயிர்கள் இருந்துள்ளன. இவற்றில் ஜாதிக்காய் அதன் பயன்பாட்டு அடிப்படையில் மிகவும் பிரசித்திப் பெற்ற நறுமணப் பயிராக இருந்துள்ளது.
ஜாதிக்காயின் பிறப்பிடம் இந்தோனேசியாவின் பான்டா தீவுகளாகும். மலேசியாவில் பினாங்கிலும் ஜாதிக்காய் அதிகமாக விளைகிறது. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய கேரள மற்றும் தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களில் ஜாதிக்காய் மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாறாமலை, பாலமோர், வேளிமலை, கரும்பாறை, ஆறுகாணி, களியல், பேச்சிப்பாறை, உள்ளிட்ட இடங்களில் ஜாதிக்காய் பயிராகிறது. இந்த பகுதிகளில் ஜாதிக் காய் மரங்கள் தனித்தோட்டங்களாக இல்லாமல் கலப்புப் பயிராக நடவு செய்யப்பட்டுள்ளன.
சீசன் காலம்
ஜாதிக் காய் மரங்கள் ஜனவரி மாதம் முதல் பூக்கத் தொடங்குகின்றன. பின்னர் ஏப்ரல் மே மாதங்கள் காய் சீசன் காலங்களாகும். இதே போன்று ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் இடைப் பருவ காய்கள் கிடைப்பதும் உண்டு.
உருண்டை வடிவில் பெரிய அளவிலான எலுமிச்சை போன்று காணப்படும் ஜாதிக்காய்கள், அதன் தடிமனான மேல் தோடு, உள்ளிருக்கும் கொட்டை அல்லது விதை, மற்றும் கொட்டையைச் சுற்றி பூ வடிவில் காணப்படும் ஜாதிப்பத்திரி என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. இதில் ஜாதிப் பத்திரியும், கொட்டையும் அதிக விலை மதிப்பு கொண்டவை. மேல் தோடுகளுக்கு அதிக விலை இல்லை. தோடுகள் ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
உணவு பதார்த்தங்களில் மணமூட்டும்
ஜாதிக்காய் கொட்டை மற்றும் ஜாதிப்பத்திரி ஆகியவை பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டவை. ஜாதிக்காய் பொடி, குழம்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பதார்த்தங்களில் மணமூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் ஜாதிக்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பற்பசை, முகப்பூச்சு உள்ளிட்டவைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜாதிக்காய் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது ஆண் மற்றும் பெண்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் மருந்தாகவும், இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தி மனதை உற்சாகமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
தற்போது ஜாதிக்காய்களின் சீசன் காலமாக உள்ள நிலையில், குலசேகரத்தில் நறுமணப் பொருட்கள் வியாபாரம் செய்யும் கடைகளுக்கு விவசாயிகள் ஜாதிக்காய்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மேலும் வியாபாரிகள் ஜாதிக்காய் மரங்களை குத்தகைக்கு எடுத்து நேரடியாக காய்களை அறுவடையும் செய்கின்றனர்.
அதிக விலைக்கு விற்பனை
மாவட்டத்தில் தற்போது ஜாதி பத்திரி கிலோவுக்கு ரூ.1,900-க்கும், கொட்டைகள் கிலோவுக்கு ரூ.350-க்கும், கொட்டைகளின் உள்ளே இருக்கும் பருப்பு கிலோவிற்கு ரூ.550 முதல் ரூ.600 வரையும் விற்பனையாகிறது.
இதுகுறித்து குலசேகரத்தில் மலை பொருள் வணிகம் செய்யும் தங்கராஜ் என்பவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் தற்போது ஜாதிக்காய்களின் சீசன் காலமாகும். ஜாதிக்காய் விவசாயிகள் காய்களை அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மேலும் தோட்டங்களுக்கு நேரடியாகச் சென்று காய்களுக்கு விலை பேசி அறுவடை செய்தும் வருகிறோம். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு விலை அதிகமாக உள்ளது என்றார்.