தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்:அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு நடந்த விழாவில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தாய்ப்பால் வாரவிழா
தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்த்திரி டீன் சிவக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரசுவதி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார்.
எதிர்காலம்
அப்போது, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்ப்பால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியமானது ஆகும். தாய்மார்கள் கண்டிப்பாக 6 மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதத்துக்கு பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவும் வழங்கலாம். 2 வயதுக்குள் குழந்தையின் மூளை வளர்ச்சி 60 சதவீதம் நிறைவடைந்து விடும். இதனால்தான் குழந்தைகள் வளர்ச்சியில் 1000 நாட்கள் மிகவும் முக்கியம் என்று கூறி வருகிறோம். கருவுற்றது முதல் 2 வயது வரை குழந்தையை பாதுகாப்பாக ஆரோக்கியமான உணவுகள் கொடுத்து வளர்ப்பது தாயின் கடமை. குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. ஆகையால் தாய்ப்பால் கொடுத்து, அறிவாற்றல் மிக்க, ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க வேண்டும் என்று கூறினார்.
வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
விழாவில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த நர்சிங் பள்ளி மாணவிகளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உதவி கண்காணிப்பாளர் குமரன், மகப்பேறு மருத்துவர் முத்துபிரபா மற்றும் டாக்டர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.