சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அம்ரிதா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் முத்துலட்சுமி வெங்கடேஷ், தாளேஸ்வரி, ஜோமில்டன், சாத்தையா, மாவட்ட துணை செயலாளர்கள் சகாய தமிழ்ச்செல்வி, கங்களா தேவி, சுதா, சத்யா, சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கணேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தர் தொடக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போராட்டத்தில், தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும்,சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 650 வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் முக்குரான், மாவட்ட செயலாளர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி நிறைவுரையாற்றினார். முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி நன்றி கூறினார்.