ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவுக்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் ரத்தசோகை குறைபாடு குறித்து விளக்கும் காணொலி வாகனத்தை கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, நான்குமுனை சந்திப்பு, சேலம் மெயின்ரோடு உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக சென்று முடிவடைந்தது. இதில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, குழந்தைகள் நல அமைப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கலெக்டர் ஷ்வரன்குமார் கூறும்போது, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேரணி நடைபெற்றது. அதேபோல் கிராமப்புற மக்கள் எளிதில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்வதற்கும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கண்டறிந்து உட்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு காணொலி வாகனம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களுக்கு ரத்தசோகை ஏற்பட காரணமாக உள்ள இரும்பு சத்து நிறைந்த உணவு பொருட்கள் உட்கொள்ளாமை, குடற்புழு பாதிப்பு, தன் சுத்தம் பேணாமல் இருத்தல், கழிவறையை பயன்படுத்தாமல் இருத்தல், செருப்பு அணியாமல் நடத்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்களை உட்கொண்டு ஆரோக்கியத்தை பேணிக்காத்திட வேண்டும் என கூறினார்.