குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம்
நாகையில் குழந்தைகளுக்கு நடந்த விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
நாகையில் குழந்தைகளுக்கு நடந்த விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
ஊட்டச்சத்து பெட்டகம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷியாமளா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி கலெக்டர் பேசியதாவது:-
குறைபாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னோடி திட்டமாக ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையால் செயல்படுத்தப்படுகிறது.
6 மாதம் வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 பெட்டகம் வழங்கப்படுகிறது. அதே போல் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
சத்து மருந்து
மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு அதாவது 56 நாட்களுக்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த சத்து மருந்து வழங்கப்படுகிறது.
அதன்படி நாகை மாவட்டத்தில் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 170 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 340 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 226 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 226 ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 566 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஆயிரத்து 605 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து பெட்டகங்களை பெற்ற தாய்மார்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஊட்டச்சத்து உணவு தொடர்பான கண்காட்சியை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.
உறுதிமொழி
அதைத்தொடர்ந்து சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்த உறுதிமொழியை கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் தலைமையில் பெண்கள் ஏற்று கொண்டனர்.