கருங்கல் அம்மன் சிலை
தஞ்சை பெரிய கோவில் அருகே கல்லணைக்கால்வாயில் நீரில் மூழ்கிய நிலையில் 3 அடி உயர கருங்கல்லால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சை பெரிய கோவில் அருகே கல்லணைக்கால்வாயில் நீரில் மூழ்கிய நிலையில் 3 அடி உயர கருங்கல்லால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரியகோவிலை சுற்றிலும் பெரிய கோட்டைச்சுவர் அமைந்துள்ளது. இந்த கோட்டைச்சுவரையொட்டி தென்பகுதியில் புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய் ஆறு செல்கிறது. இந்த ஆற்றையொட்டி படித்துறையும் உள்ளது. பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் இந்த படித்துறையில் இருந்து குளிப்பது வழக்கம்.
அதன்படி நேற்று மதியம் இந்த படித்துறையை ஒட்டி சிலர் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது படித்துறையையொட்டி ஒரு உருவம் போன்று தென்பட்டது.
3 அடி உயர அம்மன் சிலை
உடனே அருகில் சென்று பார்த்தபோது அது கருங்கல்லால் ஆன சிலை என்பது தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு குளித்துக்கொண்டு இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்த கருங்கல் சிலையை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அந்த சிலை 3 அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன அம்மன் சிலை என்பது தெரிய வந்தது. தஞ்சை பெரியகோவில் கோட்டை மதில் சுவரில் வரிசையாக கருங்கல் சிலை பதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து ஒரு சிலை பெயர்ந்து ஆற்றில் விழுந்து இருக்கலாம் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைப்பு
இதற்கிடையில் ஆற்றில் இருந்து சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் ஆற்றங்கரைக்கு வந்து சிலையை பார்த்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிலை ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால் அதனை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தாசில்தார் அலுவலகத்தில் சிலையை ஒப்படைத்தனர்.