'ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் மண் குதிரைகள்' ஜெயக்குமார் கடும் தாக்கு


ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் மண் குதிரைகள் ஜெயக்குமார் கடும் தாக்கு
x

‘ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் மண் குதிரைகள்' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

அ.தி.மு.க. பொன்விழா மாநாடு மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க.வில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாநாட்டை எழுச்சியுடன் நடத்த அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.இந்தநிலையில் அ.தி.மு.க. பொன்விழா மாநாடு ஏற்பாடுகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று காலை நடந்தது. முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் மதுரை பொன்விழா மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரை சேராத மண் குதிரைகள்

கோடநாடு விவகாரத்தை கையில் எடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களாம். அவர்களுக்கு பொழுதுபோகவில்லை. அதனால்தான் ஏதேதோ செய்கிறார்கள். தி.மு.க. ஆட்டுவித்தபடி ஆடுகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க போவதாக டி.டி.வி.தினகரன் சொல்லியிருக்கிறார். சந்திக்கட்டும். மண்குதிரைகளை நம்பி போனவர்கள், இது கரைசேராத மண்குதிரை என திரும்பி வருகிறார்கள். வண்டிக்கு அச்சாணி முக்கியம். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பார்கள். இப்படிப்பட்ட தேருடன் இணைந்து செயல்படுவது என்பது சிரிக்கும்படியான கருத்தாகவே ஏற்கமுடியும்.

கூடுதல் கட்டணம் கூடாது

செந்தில் பாலாஜி சிறை கைதியாக இருக்கிறார். அவரை இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை. அமைச்சரவை முடிவை தெரியப்படுத்த வேண்டும் என்றால், அது ரகசியமாக செய்ய வேண்டும். அதை எப்படி சிறையில் கொடுக்க முடியும்?, அமைச்சர் பிரிக்க வேண்டிய தபாலை சிறை அதிகாரிகள் படிப்பார்கள். இதில் ரகசியம் காப்பாற்றப்படவில்லையே...

செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும்போது ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்கினார்கள். இப்போது முத்துசாமி அமைச்சராக இருக்கும்போது ரூ.5 வாங்குகிறார்கள், அவ்வளவு தான். டாஸ்மாக் கடைகளின் வளர்ச்சிக்காக இந்த அரசு முழுமூச்சாக செயல்படுவது அவமானம் இல்லையா... 5 ரூபாய் முத்துசாமி என்ற அவப்பெயர் வரக்கூடாது. எனவே கூடுதல் கட்டணத்தை நிறுத்துங்கள்.

அமித்ஷாவின் பேச்சு

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவின் நல்ல திட்டங்களை கொண்டுவருவதற்காகவே அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார் என்று அமித்ஷா பேசியிருக்கிறார். எங்கள் தலைவர்கள் பெயரை சொன்னதை பாராட்டுகிறோம்.

ஆனால் அவர்களின் திட்டங்களை செயல்படுத்துகிற ஆட்சி அ.தி.மு.க.வாகத்தான் இருக்கும். வேறு யாரும் செய்யமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story