6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி.தினகரன்
6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி. தினகரன் தோன்றினர்.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.வைத்திலிங்கம் மகன் திருமண விழா தஞ்சையில் நேற்று நடந்தது.
இந்த திருமண விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதாவது 6 ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஒரே மேடையில் தோன்றினர். இருவரும் ஒன்றாக திருமணத்தை நடத்தி வைத்தனர்.
திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:-
யாராலும் வெல்ல முடியாது
அ.தி.மு.க.வில் 50 ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய கட்சி சட்ட விதி, ஜெயலலிதா வழிநடத்தி சென்ற தலைமை பாங்கு, இவைகளுக்கு எல்லாம் ஊறு ஏற்பட்டு இருக்கின்ற இந்த அரசியல் சூழலில், நாம் பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் அனைவரது எண்ணங்களில், அடிமனதில், இதயத்தில் அனைவரும் ஒற்றுமையாக ஒரு சேர வழிநடத்த வேண்டும் என்பதுதான் உள்ளது.
அந்த எண்ணத்திற்காக தஞ்சை தரணியில், சோழ மண்டலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டு இருக்கிறது. எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் தஞ்சை தரணியில் இருந்து ஆரம்பிக்கும்போது முழுமையான வெற்றி அடையும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இன்றைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. சார் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
நாம் அனைவரும் ஒருங்கிணைந்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது. நம்மை எல்லாம் உருவாக்கிவிட்டு சென்று இருக்கிற எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாவின் சிந்தனைக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்று சொன்னால் தொண்டர்கள் எல்லாம் இணைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கைகோர்த்து இருக்கிறோம்
திருமண விழாவில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
6 ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் சுயநல போக்கால், ஆதிக்க மனப்பான்மையால், பேராசையால் ஜெயலலிதாவின் இயக்கத்தை விட்டு கனத்த இதயத்துடன் நாங்கள் அ.ம.மு.க.வை தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டோம். இன்றைக்கு 6 ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க. நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஒரே மேடையில் ஒரே கூரையின் கீழ் சந்திப்பது உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்களுக்காக பணியாற்றும், தொண்டாற்றும் என்று ஜெயலலிதா சொன்னதை நிறைவேற்றுகிற விதமாக நானும், நண்பர் ஓ.பன்னீர்செல்வமும் இன்றைக்கு கைகோர்த்து இருக்கிறோம். எங்களுக்குள் இருந்த வருத்தங்களையும், கஷ்டங்களையும் புறந்தள்ளிவிட்டு மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர அ.ம.மு.க., அ.தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட தொடங்கிவிட்டது.
வருங்காலத்தில் துரோகிகளுக்கு பாடம் புகட்டி, தி.மு.க.வை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றி, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எந்தவொரு மனமாட்சியங்களுக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாக செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.