ஆவின் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஆவின் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

ஆவின் பால் விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ஒரு லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை அட்டைதாரர்களுக்கு ரூ.46-க்கும், சில்லரை விலையில் வாங்குபவர்களுக்கு ரூ.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை இன்று (நேற்று) முதல் ஒரு லிட்டர் ரூ.60 என ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஒரு லிட்டர் பால் விலை ரூ.12 அளவுக்கு, அதாவது 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தித் தரவேண்டும் என்று விவசாயிகளும், பால் விற்பனையாளர்களும் கோரிக்கை விடுத்த நிலையில், லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்களும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

டீ, காபி விலை உயரும் அபாயம்

ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியிருப்பதன் மூலம், டீ மற்றும் காபி விலைகள் மீண்டும் உயரக்கூடிய அபாய நிலையும், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய பரிதாப நிலையும் உருவாக தி.மு.க. அரசு வழிவகுத்துள்ளது.

இது இதோடு நின்றுவிடாது. அடுத்ததாக பச்சை பாக்கெட் பால் விலையை உயர்த்துதல், நீல பாக்கெட் பால் விநியோகத்தை குறைத்தல், இறுதியாக அனைத்துப் பாக்கெட் பால் விலைகளையும் உயர்த்துதல் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைத்தான் தி.மு.க. அரசு படிப்படியாக எடுக்கும் என்ற மனநிலைக்கு பொதுமக்கள், குறிப்பாக ஆவின் பாலினை நம்பியிருக்கும் ஏழை, எளிய மக்கள் வந்துவிட்டார்கள்.

கண்டனம்

இது 'திராவிட மாடல்' அரசு அல்ல, 'துரோக மாடல்' அரசு. இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கக்கூடாது என்ற எண்ணம் உண்மையிலேயே தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், பால் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யவும், கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதோடு, மக்களை ஏமாற்றுகின்ற தி.மு.க. அரசை, மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story