குஜராத்தில் நடந்த பொங்கல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
கர்ணாவதி தமிழ் சங்கம் ஏற்பாட்டில் குஜராத்தில் நடந்த பொங்கல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். பின்னர் அங்குள்ள தமிழர் குடும்பங்களை சந்தித்து பேசினார்.
சென்னை,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பில் 6-வது பொங்கல் திருவிழா, மணிநகர் தொகுதியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவருடன் பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
குத்துவிளக்கேற்றி பொங்கல் விழாவை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். விழா ஏற்பாட்டாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுதவிர மணிநகர் தொகுதியை சேர்ந்த ஏராளமான தமிழர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்
நிகழ்ச்சியின் முதற்கட்டமாக பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து மாடுகள் வழிபாடு நிகழ்ச்சி, கும்மி அடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறின.
அதனைத்தொடர்ந்து தமிழ் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தமிழர் பாரம்பரிய - கிராமிய கலை நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் ரசித்து பார்த்தனர். அதனைத்தொடர்ந்து குஜராத் வாழ் தமிழர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் கலந்துரையாடினார். அவர்களும் ஓ.பன்னீர்செல்வத்தை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.
நரேந்திர மோடி போட்டியிட்ட தொகுதி
குஜராத்தில் உள்ள மணிநகர் தொகுதியில் 35 ஆயிரம் தமிழர் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி (குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது) 2 முறை போட்டியிட்டு வென்ற தொகுதி இதுவாகும்.