ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தி.மு.க. அரசை கண்டித்தும், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்வம் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோட நாடு எஸ்டேட்டில் மத்திய அரசு அனுமதியோடு, 24 மணி நேரமும் தடையில்லா மின்வசதி செய்யப்பட்டது. ஆனால் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தபோது, மின்சாரம் எப்படி துண்டிக்கப்பட்டது. கோடநாடு எஸ்டேட் காவலாளி உள்பட அடுத்தடுத்து, 5 கொலைகள் நடந்துள்ளன. தேர்தல் நேரத்தில் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தி.மு.க. பதவியேற்ற, 90 நாட்களில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என கூறினார். ஆட்சி பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடநாடு வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீராமுலு, அ.ம.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் மாரேகவுடு, மத்திய மாவட்ட செயலாளர் அறிவழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ்குமார், ஷாபுதீன், வக்கீல் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.