தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கினை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து, அதன் வளர்ச்சி பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது. சூதாட்டம், சாராயம், போதை, கடத்தல், பதுக்கல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சரோ, 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெற்றுகொண்டிருக்கிறது என்று சொல்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் நாள்தோறும் வெட்டுக்குத்து, கொலை, தற்கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் தான் அதிகம் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை இதுதான் 'திராவிட மாடல்' போலும்.

தி.மு.க.வினருக்கு பயந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் இனி சக ஊழியர்களுக்கும் அஞ்சி நடக்கவேண்டிய நிலை தற்போது தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க.வினரின் தலையீடு பரவலாக இருப்பதும், அவர்களோடு சில அரசு ஊழியர்கள் கைகோர்த்து இருப்பதும்தான் இதுபோன்ற செயலுக்கு காரணம் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகும்.

சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டும்

அரசு அலுவலகங்களுக்குள் செல்பவர்களை எல்லாம் பரிசோதனை செய்து அனுப்பவேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மைதான் இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணம். இது கடும் கண்டனத்துக்குரியது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ராஜராஜேஸ்வரி விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பணியில் சேரவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் மற்ற பிரச்சினைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ராஜராஜேஸ்வரியை தாக்கிய இளநிலை உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story