ஓ.பன்னீர்செல்வம் ஏன் தி.மு.க. குறித்து பேசவில்லை
சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஏன் தி.மு.க. குறித்து பேசவில்லை என ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி உள்ளார்.
மன்னார்குடி:
சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஏன் தி.மு.க. குறித்து பேசவில்லை என ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆர்ப்பாட்டம்
வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து மன்னார்குடி பெரியார் சிலை சந்திப்பு அருகில் மன்னார்குடி நகர அ.தி.மு.க. சார்பில்நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.மாநில அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் வரவேற்றார்.
தி.மு.க. குறித்து ஏன் பேசவில்லை
ஆர்ப்பாட்டத்தில் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசுகையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசாதது ஏன்?, இவரை எப்படி அ.தி.மு.க.வினர் ஏற்றுகொள்வார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலனை சிந்தித்து வரிகளை உயர்த்தவில்லை. ஆனால் தி.மு.க. அரசு சொத்து வரி, வீட்டு வரி மின்சார கட்டணம், பால் விலை ஆகிவற்றை உயர்த்தி விட்டது என்றார்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு பால் வழங்கும் சங்க தலைவர் எம்.கே.கலியபெருமாள், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பொன்வாசுகிராம், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.
திருவாரூர்
இதேபோல் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு நகர அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி.யும், கட்சி அமைப்பு செயலாளருமான கோபால் கலந்து கொண்டு பேசினார்.
இதில் நகர அவைத்தலைவர் கணேசன், நகர பொருளாளர் சுரேஷ், நகர துணை செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு சொத்து வரி, மின் கட்டணம், பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சிறுபான்மை பிரிவு நிர்வாகி சகாபுதீன் செல்லப்பா நன்றி கூறினார்.