தடுப்பு கம்பியை தாண்டி வளரும் கருவேல மரங்கள்


தடுப்பு கம்பியை தாண்டி வளரும் கருவேல மரங்கள்
x

புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் தடுப்பு கம்பிகளை தாண்டி கருவேல மரங்கள் வளர்கிற நிலையில் விபத்தை ஏற்படுத்தும் முன்பே அகற்றப்படுமா? என வாகனஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி சாலை

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்கள் அதிகமாக செல்கிறது. பிரதான சாலையாக உள்ள இதில் சில இடங்களில் சாலையோரம் தடுப்புகளை தாண்டி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வருகிறது. இதனை தொடக்கத்திலேயே கவனிக்காமல் விட்டால் வளர்ந்து பெரிதாகி சாலைவரை நீண்டு விடும்.

கருேவல மரங்கள்

அந்த வகையில் குளவாய்ப்பட்டியில் குளக்கரை அருகே வளைவில் சாலையோரத்தில் விபத்தினை தடுக்கும் வகையில் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு கம்பிகளையும் தாண்டி சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடிகள் வளர்ந்து வெளியே நீண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வளைவுகளை ஒட்டிய பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் ஒரே நேரத்தில் சாலையில் இருபுறமும் வாகனங்கள் வரும் போது இரு சக்கர வாகனங்கள் சாலையோரம் ஒதுங்கினால் அந்த சீமைக்கருவேல மரச்செடிகளின் கிளைகள் அவர்கள் மீதோ அல்லது வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மீதோ படக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படக்கூட நேரிடலாம்.

கோரிக்கை

மேலும் பஸ்கள் செல்லும் போது ஜன்னல் ஓரத்தின் மீது உரசவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் சற்று கவனம் செலுத்தி தடுப்புகளை தாண்டி வளர்ந்து வரும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் காட்டுச்செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். இந்த முட்புதர்கள் மற்றும் செடியினால் விபத்து ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story