'தினத்தந்தி' செய்தி எதிரொலி:போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.
ஆபத்தான வளைவுகள்
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் இருந்து வடகரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் அகரகடம்பனூர் ஊராட்சி வல்லமங்கலம், ஆனைமங்கலம், கோகூர், வடகரை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் 2 சக்கர வாகனங்கள், கார், பஸ் டிராக்டர் மற்றும் கனரக வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் அதிக அளவில் வளைவுகள் உள்ளது. இந்த பகுதிகளில் கருவேல மரங்கள் இருபுறமும் வளர்ந்து இருந்தன. அகரகடம்பனூர் ஊராட்சி வல்லமங்கலம் பகுதியில் ஆபத்தான 2 வளைவுகளில் அதிக அளவு கருவேல மரங்கள் இருபுறமும் வளர்ந்து சாலையில் செல்பவர்களுக்கு இடையூறாக இருந்தது.
கோரிக்கை
இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கருவேல மரங்கள் வளர்ந்து இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி
இதுகுறித்து செய்தி கடந்த 15-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறமும் வளர்ந்துள்ள கருவேல மரங்களை பொக்லின் எந்திரம் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர். செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.