இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு


இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
x

களக்காடு அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள வேதநாயகபுரம் கிராமத்திற்கான இடுகாடு அப்பகுதியில் உள்ள கழுத்தருத்தான் பொத்தை அருகே உள்ளது. இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இடுகாடு நிலத்தை ஒருவர் தனக்குரிய இடம் என்றும், அதற்கு தன்னிடம் பட்டா உள்ளதாகவும் கூறி வருகிறார். இடுகாடு நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனுக்களும் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே வேதநாயகபுரத்தை சேர்ந்த விவசாயி கணபதி (47) என்பவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்களும், கிராம மக்களும் பிரச்சினைக்குரிய இடுகாட்டிற்கு சென்று குழி தோண்டினர். இதனைதொடர்ந்து அந்த நபர் அங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று, எதிர்ப்பு தெரிவித்தார். இதையொட்டி களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரெங்கசாமி, ராமநாதன் முன்னிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கலைமணி, களக்காடு வருவாய் ஆய்வாளர் முப்புடாதி, கிராம நிர்வாக அதிகாரி பக்கீர் முகைதீன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அவர்களுடன் அவர் இது எனது இடம், இங்கு உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று கடும் வாக்குவாதம் செய்தார். போலீசார் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவசாயி கணபதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story