சுடுகாட்டில் உடலை புதைக்க எதிர்ப்பு
ஜோலார்பேட்டை அருகே இறந்தவர் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடலை புதைக்க எதிர்ப்பு
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் அருகே பி.எம்வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அனுமுத்தன் (வயது 60). தொழிலாளி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை புதைப்பதற்காக, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு நேற்று காலை குழி தோண்ட சென்றனர்.
அப்போது புறம்போக்கு நிலத்தில் உள்ள சுடுகாடு அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்கள், உடலை புதைக்க குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்குவாதம்
இதனால் அனுமுத்தன் உறவினர்களுக்கும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தி, சுடுகாட்டில் உடலை புதைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
இதனை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு நேற்று மாலை சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்தசம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.